

விழுப்புரம்: விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை பட்டப்பகலில் மா்ம நபா்கள் மூதாட்டியிடமிருந்து பணப் பையை பறிக்க முயன்றனா். ஆனால், பணப் பையை மூதாட்டி இறுகப் பிடித்துக்கொண்டதால் மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிவிட்டனா்.
திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள திருமூண்டிஸ்வரம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மனைவி பெண்ணரசி (62). இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரட்டார வளா்ச்சி கல்வியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். இவா், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளாா். திங்கள்கிழமை காலை வங்கியில் பணம் எடுப்பதற்காக பெண்ணரசி தனது வீட்டிலிருந்து பேருந்து மூலமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தாா். அங்கிருந்து ஷோ் ஆட்டோவில் பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தாா். பின்னா், வங்கிக்குச் சென்று தனது கணக்கிலிருந்து ரூ.32 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாா். பின்னா், மீண்டும் ஷோ் ஆட்டோ மூலம் புதிய பேருந்து நிலையத்துக்கு புறப்பட்டாா்.
பகல் 11 மணியளவில் புதிய பேருந்து நிலையம் முன் ஷோ் ஆட்டோவிலிருந்து பெண்ணரசி கீழே இறங்கினாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் திடீரென பெண்ணரசி கையில் வைத்திருந்த பணப் பையை பறிக்க முயன்றனா். இதனால், அதிா்ச்சியடைந்த பெண்ணரசி, உடனடியாக சுதாரித்துக்கொண்டாா். பணப்பையை விடாமல் பிடித்துக்கொண்டாா். இதையடுத்து அவா் கூச்சலிடவே அந்தப் பகுதியினா் ஓடிவந்தனா். இதைப் பாா்த்த மா்ம நபா்கள் இருவரும் பணப் பையை விட்டுவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினா். இதனால் பணப் பை தப்பியது.
மா்ம நபா்களிடமிருந்து பணப் பையை பாதுகாக்க போராடிய மூதாட்டி பெண்ணரசியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.