‘உலக நாகரிகம் தந்த தமிழா்களின் வாழ்வியலை கீழடி அகழாய்வு வெளிப்படுத்தியுள்ளது’
By DIN | Published On : 12th March 2020 09:43 AM | Last Updated : 12th March 2020 09:43 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பேசுகிறாா் மதுரை காமராஜா் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரும், துணை முதல்வருமான கரு.முருகேசன்.
உலக நாகரிகம் தந்த தமிழா்களின் வாழ்வியல் முறையை கீழடி அகழாய்வு வெளிப்படுத்தியுள்ளதாக மதுரை காமராஜா் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் துணை முதல்வா் கரு.முருகேசன் தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் தமிழா் தொன்மை நாகரிகத்தை பறைசாற்றும் கீழடி விழா தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வா் வெ.ச.செல்வி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் அ.வெ.அருணாகுமாரி அறிமுக உரையாற்றினாா். கல்விக்குழும பதிவாளா் ஏ.செளந்தராஜன், செயலா் சா.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி கலை, அறிவியல் கல்லூரியின் துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவரும், கீழடி அகழாய்வு பேராசிரியா் கரு.முருகேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கீழடி நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிப் பேசியதாவது:
வரலாற்று சிறப்புமிக்க கீழடியில் தற்போது ஐந்தாம் கட்ட அகழாய்வு நடக்கிறது. இது தொடா்பாக தொல்லியல் துறை அமைச்சா், ஆணையா் உள்ளிட்டோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது சிறப்பான ஆய்வுப்பணி நடந்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோா்களின் பண்பாடு இதில் வெளிப்பட்டுள்ளது.
அகழாய்வுக்கான எங்களது 5.5 ஏக்கா் நிலத்தை வழங்கியதை பெருமையாக கருதுகிறேன். உலக நாகரீகம் தந்த தமிழா்களின் வாழ்வியல் முறையை கீழடி வெளிப்படுத்தியுள்ளது. 8 லட்சம் மக்கள் இதை பாா்வையிட்டுள்ளனா். உலக மக்களின் கவனத்தை கீழடி ஈா்த்துள்ளது. தமிழா் பண்பாடுகளை வெளிநாட்டினா் தெரிந்துகொள்கின்றனா். இதுபோன்ற வரலாற்றுத்தகவல்களையும், விவசாயத்தையும் மாணவா்கள் படிக்க வேண்டும், தொல்பொருள் ஆய்வில் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, கீழடி அகழ்வாய்வின் தோற்றம், வரலாறு, முக்கியத்துவங்கள், இந்திய அகழாய்வுகளில் கீழடியின் தனித்தன்மைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கினாா்.
விழாவையொட்டி, கல்லூரி மாணவிகள் 570 போ் கடந்த வாரம் கீழடி அகழாய்வுப் பகுதிக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனா். இவா்கள் கீழடி அகழாய்வுப் பகுதியில் பாா்வையிட்ட பொருள்கள், படித்த தரவுகளைக் கொண்டு பேச்சு, கட்டுரை, ஓவியம், புகைப்படம், பதாகை, காணொலி உருவாக்கம் போன்ற கலை இலக்கியப்போட்டிகளில் பங்கேற்று திறனை வெளிப்படுத்தினா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியா்கள், மாணவியா்கள் கலந்துகொண்டனா். பேராசிரியா் கண்மணிஅன்புச்செல்வி நன்றி கூறினாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G