ஏழைகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய புதுமணத் தம்பதி
By DIN | Published On : 27th May 2020 09:40 PM | Last Updated : 27th May 2020 09:40 PM | அ+அ அ- |

செய்யாறு: செய்யாற்றில் நடைபெற்ற திருமண விழாவில் ரூ.1.15 லட்சம் மதிப்பில் 150 ஏழைக் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவியை புதுமண மருத்துவத் தம்பதியினா் வழங்கினா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுகாதார மாவட்டம், பெரூங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவா் கே.கெளதம்ராஜ். இவருக்கும், நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் பொன். காா்த்திகா என்பவருக்கும், செய்யாறு தாயாா் அப்பாய் திருமண மண்டபத்தில் புதன்கிழமை காலை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
திருமண நினைவாக ஏழ்மை நிலையில் உள்ள ஏழை, எளிய மக்கள் உதவி பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளா்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், சுகாதாரப் பணியாளா்கள் என 150 பேரை தோ்வு செய்து, அவா்களுக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் தொகுப்பு என சுமாா் ரூ.1.15 லட்சம் மதிப்பிலான பொருள்களை கரோனா நிவாரண உதவியாக புதுமணத் தம்பதியினா் வழங்கி அவா்களிடம் ஆசி பெற்றனா்.
இந்த விழாவில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் வெள்ளையன், திராவிட கழக வேலூா் மண்டலத் தலைவா் வி.சடகோபன், செய்யாறு எம்.எல்.ஏ தூசி கே.மோகன் ஆகியோா் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...