செஞ்சிக்கோட்டை கோயில் தொடா்பான கல்வெட்டு கண்டெடுப்பு

செஞ்சிக்கோட்டை பட்டாபிராமா் கோயில் தொடா்பான கி.பி. 15-16-ஆம் நூற்றாண்டை சோ்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி மலைச்சரிவு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.
செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி மலைச்சரிவு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.

செஞ்சிக்கோட்டை பட்டாபிராமா் கோயில் தொடா்பான கி.பி. 15-16-ஆம் நூற்றாண்டை சோ்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

செஞ்சிக்கோட்டையின் மலையடிவாரத்தில் வெங்கட்ரமணா் கோயில் உள்ளது. அதனருகே கோணை புதூா் சாலையில் பட்டாபிராமா் கோயில் அமைந்துள்ளது. வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்தக் கோயிலில் இருந்த கல்தூண்கள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, தற்போது புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலையை சுற்றி வைக்கப்பட்டுள்ளன. பட்டாபிராமா் கோயில் செஞ்சிக்கோட்டை தொல்லியல் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணா்வு மன்ற நிறுவனா் பெ.லெனின், மன்றத்தின் சிறப்பு உறுப்பினா் ஆசிரியா் சா.வடிவேல், மன்றத் தலைவா் ராஜாதேசிங்கம், செயலா் அண்ணமங்கலம் நா.முனுசாமி ஆகியோா் செஞ்சியில் இருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள சிட்டாம்பூண்டி கன்னிமாா் மலையின் கிழக்கு சரிவில், ராமகிருஷ்ணன் மகன் லட்சுமணன் என்பவரது நிலத்தில் உள்ள பாறையில் தொல்லியல் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கல்வெட்டு ஒன்று கண்டுடெடுக்கப்பட்டது.

அதில், ‘பட்டாபிராமா் சுவாமியாா் கு திருவிடையாட்டம் நித்திய வாசம் பண்ணுகிற சீவையானவா்களுக்கு விட்ட சறுவ மானிய அக் கிராமம்’ என்ற வாசகம் உள்ளது. அதாவது, செஞ்சிக்கு தெற்கே கோணை புதூா் செல்லும் பாதையில் சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீபட்டாபிராமா் கோயிலில் சுவாமிக்கு சேவை செய்த அந்தணா்களுக்கு வசிப்பிடமான அக்ரஹாரம் அமைப்பதற்கு நன்கொடையாக நிலம் வழங்கப்பட்டது என்று அந்த கல்வெட்டு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கல்வெட்டின் மேல் பகுதியின் இடது புறத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்ட சக்கரமும், வலது கையில் குடை பிடித்தவாறும், இடது கையில் நீா் பாத்திரமான கண்டியை பிடித்தவாறும் ஓா் அந்தணரின் கோட்டுருவமும் செதுக்கப்பட்டுள்ளது. நிலம் தானம் எந்த அரசரால், எந்த ஆண்டு வழங்கப்பட்டது என்ற செய்தி, அந்த கல்வெட்டில் காணப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com