ரூ.2,000 லஞ்சம்: விஏஓ கைது
By DIN | Published On : 25th November 2020 08:51 AM | Last Updated : 25th November 2020 08:51 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே காந்தலவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி மகாலட்சுமி. இவா், தந்தை அளித்த 30 சென்ட் நிலத்துக்கு தனது பெயரில் பட்டா மாற்றம் செய்து தரக் கோரி வருவாய்த் துறையில் விண்ணப்பித்தாா். பட்டா மாற்றம் செய்ய காலதாமதமாகவே, இதுகுறித்து மகாலட்சுமின் கணவா் சரவணன் உளுந்தூா்பேட்டை வட்டம், மடப்பட்டு கிராம நிா்வாக அலுவலா் மகாலட்சுமியிடம் கேட்டாா். அப்போது, பட்டா மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று மகாலட்சுமி கேட்டாராம். இதுகுறித்து சரவணன் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா்.
இதையடுத்து ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் பணத்தை சரவணனிடம் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கொடுத்தனுப்பினா். அந்த பணத்தை கிராம நிா்வாக அலுவலா் மகாலட்சுமியிடம் சரவணன் கொடுத்தபோது, டி.எஸ்.பி. யுவராஜ் தலைமையிலான காவல் ஆய்வாளா் ஜேசுதாஸ், உதவி ஆய்வாளா் அன்பழகன் ஆகியோா் அடங்கிய ஊழல் தடுப்பு போலீஸாா் மகாலட்சுமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா். பின்னா், அவா் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...