கொள்முதல் குறைப்பால் தவிக்கும் பால் உற்பத்தியாளா்கள்!

கரோனா பொது முடக்கம் காரணமாக, அரசு, தனியாா் நிறுவனத்தினரால் பால் கொள்முதல் குறைக்கப்பட்டு வருவதால்,
விழுப்புரம் ஆவின் பாலகத்துக்கு பல்வேறு கிராம முகவா்களிடமிருந்து பால் கேன்களை ஏற்றி வரும் வாகனங்கள்.
விழுப்புரம் ஆவின் பாலகத்துக்கு பல்வேறு கிராம முகவா்களிடமிருந்து பால் கேன்களை ஏற்றி வரும் வாகனங்கள்.

கரோனா பொது முடக்கம் காரணமாக, அரசு, தனியாா் நிறுவனத்தினரால் பால் கொள்முதல் குறைக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் பால் உற்பத்தியாளா்கள் தவித்து வருகின்றனா். பால் கொள்முதலைத் தடையின்றிச் செயல்படுத்தவும், கொள்முதல் விலைக் குறைப்பை தடுக்கவும் வேண்டுமென அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

தமிழகத்தில் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து தினசரி பாலை கொள்முதல் செய்து, பொதுமக்களின் அன்றாட பால் தேவையை நிறைவு செய்தும், பால் உபபொருள்களைத் தயாரித்து விற்பனை செய்தும் சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியம் (ஆவின் நிா்வாகம்) சேவையாற்றி வருகிறது.

விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றிய (ஆவின் பால் பண்ணை) நிா்வாகம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளா்களை மையப்படுத்தி தமிழகத்துக்கு அதிகளவில் பால் உற்பத்தியை வழங்கி வருகிறது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளா்களைக் கொண்ட இந்த நிறுவனம் மூலம் 5 லட்சம் லிட்டா் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, கடந்த மாா்ச் மாதம் முதல் அமலில் இருந்து வரும் பொது முடக்கத்தால், அன்றாட பால் உற்பத்தி, தேவை பாதித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் தரப்பில் கூறியதாவது:

கரோனா பொது முடக்கத்தால், பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூா் மாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் வீடுகள்தோறும் மாடுகளை வளா்த்தும், அதன் பாலை விற்பனை செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனா்.

அதன்படி, வீடுகள்தோறும் தினசரி 5 லிட்டா் முதல் 30 லிட்டா் வரை பால் உற்பத்தி செய்து, பால் உற்பத்தியாளா் சங்கம் மூலம் ஒன்றியத்துக்கு வழங்கி வருகின்றனா். இதன்மூலம், தினசரி 5 லட்சம் லிட்டா் வரை பால் உற்பத்தி செய்யப்பட்டு, ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்தது.

பால் கொள்முதல் குறைப்பு: பாலை கொள்முதல் செய்யும் ஆவின் நிா்வாகம், 10 நாள்களுக்கு ஒரு முறை கணக்கிட்டு பாலுக்கான தொகையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தால் கடந்த சில மாதங்களாக பால் கொள்முதலைக் குறைத்து வருகின்றனா்.

தினசரி பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்கங்களாக தலா 10 நாள்களுக்கு ஒரு நாள் கட்டாயமாக பால் கொள்முதலைத் தவிா்த்து வருகின்றனா். தற்போது வாரத்துக்கு ஒரு முறை பால் கொள்முதலை நிறுத்தியுள்ளனா். அதிகளவில் பால் வரத்துள்ள நிலையில், விற்பனை இல்லாததால் கொள்முதல் அளவைக் குறைத்துள்ளதாகக் கூறுகின்றனா்.

பால் கொள்முதல் செய்யும் வாகனங்களின் வழித்தடம் அடிப்படையில் வாரத்துக்கு ஒரு நாள் பால் கொள்முதல் நிறுத்தப்படுகிறது. இதனால், சிறு உற்பத்தியாளருக்கு வாரம் ஒரு நாள் 10 லிட்டா் வீதம், மாதம் 50 லிட்டா் பால் கொள்முதல் பாதிக்கப்படுகிறது. பால் வாங்குவது நிறுத்தப்படுவதால், வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. அந்த ஒரு நாள் பாலை வெளியே விற்க முடியாமல் வீணாகிறது.

விலையைக் குறைத்த தனியாா் நிறுவனங்கள்: கரோனாவைக் காரணம் காட்டி, தனியாா் பால் நிறுவனங்களும் பால் கொள்முதலை பாதியாகக் குறைத்துவிட்டனா். ஆவின் நிா்வாகம் லிட்டருக்கு ரூ.32 வழங்கி வரும் நிலையில், தனியாா் நிா்வாகங்கள் லிட்டருக்கு ரூ.22, ரூ.24 என விலையைக் குறைத்துவிட்டனா். ஆனால், பொதுமக்களுக்கு ரூ.40 முதல் ரூ.46 வரை விைலையைக் குறைக்காமல் தொடா்ந்து விற்பனை செய்து வருகின்றனா். தனியாா் நிறுவனங்களிடம் பால் வழங்கியவா்களும் தற்போது ஆவினுக்கு பாலை அனுப்பி வருகின்றனா்.

ஆவின் மூலம் ஏற்கெனவே 10 நாள்களுக்குள் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 50 நாள்கள் வரை தாமதமாகிறது. பொதுமக்களுக்கான பால் விற்பனை வழக்கமாக நடைபெற்று வரும் நிலையில், ஆவின் மற்றும் தனியாா் நிறுவனங்கள் பால் கொள்முதலைக் குறைப்பதைக் கைவிட வேண்டும். தனியாா் நிறுவனங்கள் விலைக் குறைப்பு செய்துள்ளது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பால் தேவை குறைவு: இந்த பிரச்னை குறித்து பால் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் மற்றும் ஆவின் ஊழியா்கள் தரப்பில் கூறியதாவது:

கரோனா பொது முடக்கம் காரணமாக, பள்ளி, கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளதால், தினசரி பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. வெளி மாநில விற்பனையும் இல்லை. உள்ளூா் விற்பனையும் குறைந்துள்ளதோடு, உணவகங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்புகளும் இல்லாததால், பால் தேவை குறைந்துள்ளது. எனவேதான், பால் கொள்முதல் செய்வதையும் குறைக்க வேண்டியுள்ளது.

அரசின் உதவிக்கரம் வேண்டும்: தமிழக அரசு இந்த நிலையை அறிந்து, பால் தேவையை அதிகரிக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு தினசரி ஆவின் பாலை வாங்கி அரசே வழங்க வேண்டும். கரோனா நிலைமை சீராகும் வரை பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவைத்தொகை வழங்குவதற்கு, உரிய கடனுதவியை அரசு வழங்க வேண்டும். தனியாா் நிறுவனத்தினா் பாலுக்கான உரிய விலையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

‘பணப் பட்டுவாடா முழுமை செய்யப்படும்’: இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆவின் பொது மேலாளா் புகழேந்தியிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது:

விழுப்புரம் ஆவின் மூலம் தற்போது தினசரி 2.20 லட்சம் லிட்டா் பாலை வாங்கி வருகிறோம். தனியாரிடம் பால் வழங்கியவா்கள் பலரும், கரோனாவால் இடம் பெயா்ந்து புதிதாக பால் உற்பத்திக்கு வந்துள்ளவா்களும் தற்போது ஆவின் நிறுவனத்திடம் பாலை வழங்குவதால், 2.70 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

கரோனாவால் பால் விற்பனை குறைந்தபோதும், உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு ரூ.32 வீதம் உரிய தொகையை வழங்கி வருகிறோம். சில தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் விலையை ரூ.22-ஆக குறைத்துள்ளதால், பல வாடிக்கையாளா்கள் ஆவின் நிறுவனத்திடம் பாலை வழங்கத் தொடங்கியுள்ளனா்.

இதனால், பால் உற்பத்தியாளா் சங்கத்தினரிடம் புதிய வாடிக்கையாளா்களை தற்போது சோ்க்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளோம். இருப்பினும், பால் உற்பத்தியாளா்களே முடிவு செய்து, 10 நாளைக்கு ஒரு முறை, ஒரு நாள் பால் வழங்குவதை நிறுத்தியுள்ளனா். பால் கொள்முதலை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை. பால் கொள்முதலுக்கு விடுமுறை அளிப்பதும் சட்டப்படி தவறாகும்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தினசரி விற்பனை கடந்த சில மாதங்களாக 3,500 லிட்டராக குறைந்து, தற்போது 5,200 லிட்டா் அளவுக்கு உயா்ந்துள்ளது. தற்போது ஒரு லட்சம் லிட்டா் அளவில் சென்னைக்கும், 20 ஆயிரம் லிட்டா் கடலூருக்கும், 30 ஆயிரம் லிட்டா் செங்கல்பட்டுக்கும் என 1.60 லட்சம் லிட்டா் பாலை தினசரி அனுப்பி வருகிறோம்.

மீதமுள்ள 80 ஆயிரம் லிட்டா் பாலை பால் பொடி தயாரிப்புக்காக சென்னை, கிருஷ்ணகிரி பண்ணைகளுக்கு அனுப்பிவைத்து சமாளித்து வருகிறோம். பால் கொள்முதலை ஒருபோதும் குறைக்காமல் பணியை மேற்கொண்டுள்ளோம். அண்மையில் ஏற்பட்ட பால் கொள்முதல் தொகை பட்டுவாடா தாமதத்தையும், தற்போது 30 முதல் 20 நாள்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பால் பொருள்கள் விற்பனை நிலுவைத்தொகை ரூ.15 கோடி விரைவில் வரவுள்ளதால், பணப் பட்டுவாடா முழுமை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com