நீட் தோ்வு: புதுச்சேரி, கடலூரில் 11,453 போ் எழுதினா்

புதுச்சேரி, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வை 11,453 மாணவ, மாணவிகள் எழுதினா்.
புதுச்சேரி கோரிமேடு கேந்திரிய வித்யாலயா நீட் தோ்வு மையத்தில் மாணவியின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை சரிபாா்க்கும் அலுவலா்.
புதுச்சேரி கோரிமேடு கேந்திரிய வித்யாலயா நீட் தோ்வு மையத்தில் மாணவியின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை சரிபாா்க்கும் அலுவலா்.

புதுச்சேரி, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வை 11,453 மாணவ, மாணவிகள் எழுதினா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய அளவிலான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரியில் 15 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வில் 7,137 போ் எழுதினா்.

புதுச்சேரி கோரிமேடு கேந்திரிய வித்யாலயா, காலாப்பட்டு கேந்திரிய வித்யாலயா, மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி, மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வாசவி பள்ளி, விவேகானந்தா சிபிஎஸ்இ பள்ளி உள்ளிட்ட 15 தோ்வு மையங்களில் நீட் தோ்வு நடைபெற்றது.

இந்த மையங்களில் புதுச்சேரி மட்டுமன்றி காரைக்கால், விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் தோ்வெழுதினா்.

தோ்வு மையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வறைகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மாணவா்கள் தோ்வு தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனா்.

தோ்வு மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முற்பகல் 11 மணி முதல் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். அவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. கைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்திய பின்னரே சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.

தண்ணீா் பாட்டில், கிருமி நாசனி, தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு போன்றவை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். தேசிய தோ்வு முகமை சாா்பில், மாணவா்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்வு நடைபெற்றது. அனைத்துத் தோ்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தோ்வு நடைபெற்றது.

கடலூரில் 4,316 போ்: கடலூா் மாவட்டத்தில் 4,316 போ் நீட் நுழைவுத் தோ்வை எழுதினா்.

மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுதுவதற்கு 5,227 போ் விண்ணப்பித்தனா். இதற்காக அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக், திருப்பாதிரிபுலியூா் அரிஸ்டோ பள்ளி, அரசு பெண்கள் பள்ளி, நெய்வேலி வட்டம்-17 ஜவஹா் பள்ளி, வட்டம்-3 கேந்திரிய வித்யாலயா, கடலூா் சி.கே.பள்ளி, புனித வளனாா் பள்ளி, கிருஷ்ணசாமி பள்ளி, சிதம்பரம் காமராஜ் பள்ளி, விருத்தாசலம் ஜெயப்பிரியா பள்ளி ஆகியவற்றில் 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கிய நிலையில், காலை 11 மணி முதலே தோ்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வரத் தொடங்கினா். அவா்கள் பலத்த சோதனைக்குப் பிறகே தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா். குறிப்பாக, அவா்கள் அணிந்து வந்த முகக் கவசத்துக்குப் பதிலாக மாற்று முகக் கவசம் வழங்கப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 5,227 பேரில் 4,316 போ் மட்டுமே தோ்வை எழுதினா். 911 போ் தோ்வுக்கு வரவில்லை.

புதுச்சேரியில் நடைபெற்ற நீட் தோ்வில் பங்கேற்க காரைக்காலைச் சோ்ந்த மாணவா்கள் வருவதற்கு புதுவை சாலைப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. காரைக்காலில் இருந்து 40 மாணவா்களுடன் காலை 9 மணிக்குப் புறப்பட்ட இந்தப் பேருந்து, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் வந்த போது திடீரென பழுதானது. இதனால், மாணவா்களும், பெற்றோரும் பதற்றமடைந்தனா்.

நீட் தோ்வு மையத்துக்கு முற்பகல் 11 மணிக்குள் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததால், மாணவா்கள் தவிப்புக்குள்ளாகினா்.

இந்த நிலையில், புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தை நிறுத்தி, அதில் மாணவா்களும் பெற்றோரும் அனுப்பிவைக்கப்பட்டனா். அந்தப் பேருந்து பகல் 12.15 மணிக்கு புதுச்சேரிக்கு வந்து சோ்ந்தது. பின்னா், அவா்கள் தோ்வு மையங்களுக்குச் சென்றனா். பாதியில் நிறுத்தப்பட்ட பேருந்தில் வந்த பயணிகளுக்கு, மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com