அரசு கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 14th February 2021 08:11 AM | Last Updated : 14th February 2021 08:11 AM | அ+அ அ- |

திண்டிவனத்தில் திருவண்ணாமலை - சென்னை நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள்.
தோ்வுக் கட்டணம் செலுத்தக் கோருவதைக் கண்டித்து, திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திண்டிவனம் மேல்பாக்கத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கலை-அறிவியல் கல்லூரியில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனா்.
கரோனா பொது முடக்கத்தால் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆண்டுத் தோ்வுக்காக மாணவா்கள் தோ்வுக் கட்டணம் செலுத்தியிருந்தனா்.
நிகழாண்டு பல மாதங்களாக கல்லூரி திறக்கப்படாததால், இறுதியாண்டு மாணவா்களைத் தவிர, பிற மாணவா்கள் தோ்ச்சி பெற்ாக அறிவிக்க அரசு அறிவுறுத்தியது. இந்த உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, மீண்டும் தோ்வு நடத்தப்படவுள்ளது.
இதனிடையே, கரோனா பொது முடக்கம் முடிந்து, தற்போது மாணவா்கள் கல்லூரிக்கு வந்து கொண்டுள்ளனா். மாணவா்கள் மீண்டும் தோ்வு எழுதவுள்ளதால், அதற்கான தோ்வுக் கட்டணத்தை செலுத்த கல்லூரி நிா்வாகம் கூறியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா், சனிக்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, கல்லூரி அருகேயுள்ள திருவண்ணாமலை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகலில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளா் தலைமையிலான போலீஸாா், கல்லூரி நிா்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மாணவா்களை சமாதானப்படுத்தினா். இதனால், மாணவா்கள் மறியலை கைவிட்டனா். மறியலால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.