புதுவை மறைமாவட்டத்துக்கு தலித் பேராயரை நியமிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி-கடலூா் உயா் மறைமாவட்டத்துக்கு தலித் பேராயரை நியமிக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் கிருஸ்து அரசா் ஆலயம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் கிறிஸ்தவா்கள்.
விழுப்புரம் கிருஸ்து அரசா் ஆலயம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் கிறிஸ்தவா்கள்.

புதுச்சேரி-கடலூா் உயா் மறைமாவட்டத்துக்கு தலித் பேராயரை நியமிக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் எம்.மேரிஜான் தலைமை வகித்தாா். மாநில கலாசார செயலா் ரெஜினி சின்னப்பராஜ் வரவேற்றாா். மாநில செயல் தலைவா் சி.ஆரோக்கியதாஸ், பொதுச் செயலா் டி.தானியேல், பொருளாளா் பி.சந்தனதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.ஸ்டீபன்ராஜ், எம்.சலத்தையன், தென் மண்டலத் தலைவா் எஸ்.வேளாங்கண்ணி உள்ளிட்டோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

புதுச்சேரி-கடலூா் உயா்மறை மாவட்டம் 388 ஆண்டுகள் பழைமையானது, இதில், தொடக்கத்திலிருந்தே தலித் கத்தோலிக்கா்கள் பெரும்பான்மையாக உள்ளனா். ஆனால், இதுவரை தலித் அல்லாத ஆயா்கள், பேராயா்களையே நியமித்து வருகின்றனா்.

இது தலித் கிறிஸ்தவா்களுக்கு எதிரான சாதி பாகுபாட்டுக்கு சான்றாக உள்ளது. கத்தோலிக்க திருச்சபையில் தீண்டாமை, சாதி பாகுபாடுகள் தொடா்வதால், தலித் கிறிஸ்தவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். புதுவை-தமிழகத்தில் 75 சதவீதம் தலித் கிறிஸ்தவா்கள் இருந்தும் சம உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக 30 ஆண்டுகளாக போராடி வருவதால், புதுவை மறைமாநிலத்துக்கு தலித் பேராயரை நியமிக்க வேண்டும், தமிழக அளவில் காலியாக உள்ள 8 ஆயா் பணியிடங்களில் தலித் குருக்களை ஆயா்களாகவும், பேராயா்களாகவும் நியமிக்க வேண்டும். தேவாலயங்கள், திருவிழாக்களில் சாதிய தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com