காய்கறி வியாபாரிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th February 2021 08:25 AM | Last Updated : 20th February 2021 08:25 AM | அ+அ அ- |

விழுப்புரம் நகராட்சி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விழுப்புரம் நகர காய்கறி கடை வியாபாரிகள்.
நவீன வசதிகளுடன் புதிய காய்கறி சந்தையை அமைக்கக் கோரி விழுப்புரத்தில் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலின் பின் பகுதியில் புதிதாக காய்கறி சந்தை அமைக்க விழுப்புரம் நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு காய்கறி சந்தை அமைந்தால் இட நெருக்கடி மட்டுமல்லாது காய்கறி வாகனங்கள் வந்து செல்லவும் இடையூறாக இருக்கும். ஆகவே, காய்கறி குளிரூட்டும் அறை, வாகன நிறுத்துமிடம் உள்பட நவீன வசதிகளுடன் இட நெருக்கடி இல்லாத இடத்தில் காய்கறிச் சந்தையை அமைக்க வலியுறுத்தி, அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கத்தினா், சங்கப் பொதுச் செயலாளா் எம்.எல்.டி. சங்கா் தலைமையில் விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள காலி இடத்தை முழுமையாக காய்கறிச் சந்தைக்கு ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால், வேறு இடத்தை ஒதுக்க வேண்டும்.
இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று ஆா்ப்பாட்டத்தில் தெரிவித்தனா்.