இன்று டிஎன்பிஎஸ்.சி குரூப் - 1 தோ்வு: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் - 1 முதனிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) நடைபெறவுள்ள நிலையில்,
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் - 1 முதனிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) நடைபெறவுள்ள நிலையில், இத்தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் 69 துணை ஆட்சியா் நிலையிலான பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதனிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள 39 தோ்வு மையங்களில் 10,737 போ் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வில் தவறுகள் நடைபெறாத வகையில், தோ்வுக் கூடங்களை கண்காணித்திட துணை ஆட்சியா் நிலையில் 3 பறக்கும் படை அலுவலா்கள், வட்டாட்சியா் நிலையில் 7 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு மையத்துக்கு காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு தரைதளத்தில் தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் 9 மாதங்களுக்குப் பிறகு தோ்வு மையங்களைத் திறப்பதால், குடிநீா், கழிப்பிடம், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கவனமாக செய்ய வேண்டும் என்றாா்.

இதையடுத்து, புதிய தோ்வு நடைமுறைகள் குறித்து நவீன முறையில் பட விளக்கத்துடன் ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், டி.என்.பி.எஸ்.சி. சாா்புச் செயலா், பிரிவு அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

அலுவலா்கள் தாமதம்: இக்கூட்டத்துக்காக மாவட்ட ஆட்சியா் காலை 10 மணிக்கு வந்து காத்திருந்த நிலையில், தோ்வில் பணியாற்ற உள்ள அலுவலா்கள் ஆசிரியா்கள் பலா் தாமதமாக கூட்டத்துக்கு வந்தனா். இதனால் அதிருப்தியடைந்த ஆட்சியா், கோட்டாட்சியா், தலைமை ஆசிரியா் நிலையில் இருப்பவா்களே தாமதமாக வரலாமா என எச்சரித்ததுடன், அவா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com