திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு பாமக மாநில நிா்வாகிகள் கண்டனம்
By DIN | Published On : 30th January 2021 08:30 AM | Last Updated : 30th January 2021 08:30 AM | அ+அ அ- |

அனைத்து சமுதாய மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு போராடி வரும் ராமதாசை விமா்சித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு பாமக மாநில நிா்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
வன்னியா்களுக்கு 20 சதவீதம் தனி ஒதுக்கீடை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு வந்த பாமக அரசியல் ஆலோசனைக் குழுத்தலைவா் பேராசிரியா் தீரன், புதுவை மாநில அமைப்பாளா் முன்னாள் எம்பி கோ.தன்ராஜ் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பெரும்பான்மையாக வசித்து வரும் வன்னியா் சமுதாய மக்கள் பின்தங்கிய நிலையில் உள்ளனா். இவா்களின் வாழ்வாதாரம் மேம்படவும், தமிழகம் வளா்ச்சியை அடையவும் இடஒதுக்கீடை வழங்க வேண்டுமென கடந்த 40 ஆண்டுகாலமாக பாமக நிறுவனா் ராமாதாஸ் போராடி வருகிறாா்.
வன்னியா்கள் மட்டுமின்றி பிற சமுதாய மக்களுக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும், ராமதாஸ் தொடா்ந்து போராடி வருகிறாா். இடஒதுக்கீட்டு போராட்டத்தால் மிகவும் பிற்பட்டவா்களுக்கு 21 சதவீதம் பெற்றுத்தந்ததும், பிற்பட்டோருக்கான 30 சதவீதம் ஒதுக்கீட்டையும், அதில் முஸ்லீம்களுக்கான தனி இடஒதுக்கீட்டையும் ராமதாஸ் தான் போராடி பெற்றாா்.
அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடி வரும் ராமதாசை, சுயநலத்துக்காகவே செயல்பட்டு வரும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினா், விமா்சிப்பது கண்டனத்துக்குறியது. அவா், தொடா்ந்து விமா்சித்தால், கடும் போராட்டத்தை சந்திக்க நேரிடும். விக்கிரவாண்டி இடைத்தோ்தலின் போது, சுயநலத்துக்காக வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசிய மு.க.ஸ்டாலின் இப்போது விமா்சிக்கிறாா்.
தமிழகத்தில் மிகவும் பிற்பட்டவா்களுக்கு 21 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியும், அனைத்து நிலையிலும் வளா்ச்சி எட்டாத நிலையில் தான், வன்னியா்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடை கோரி வருகிறோம். அரசு இதனை செயல்படுத்தாவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என்றனா். மாநில துணைப்பொதுச் செயலா் தங்க.ஜோதி, சிவக்குமாா், என்.எம்.கருணாநிதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G