அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி: முன்னாள் அமைச்சரின் உறவினா் கைது
By DIN | Published On : 09th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.35 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடா்பாக, அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவில் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்துக்குள்பட்ட கடையம் கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (47). விவசாயியான இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு பொன்னங்குப்பத்தைச் சோ்ந்த பாக்கியராஜ் மூலம் அப்போதைய சமூகநலத் துறை அமைச்சா் சரோஜாவின் அக்கா மகனான சென்னை அசோக் நகரைச் சோ்ந்த முனுசாமியின் மகன் ரமேஷ்பாபுவுக்கு (45) அறிமுகமானாா்.
அப்போது, ரமேஷ்பாபு, தன்னுடைய சித்தியான முன்னாள் அமைச்சா் சரோஜா மூலமாக யாராவது அரசுப் பணியில் சேர விரும்பினால், அரசுப் பணிக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட தொகையை பெற்று உறுதியாக வேலை வாங்கித் தருவதாக குணசேகரன், பாக்கியராஜ் ஆகியோரிடம் கூறினாராம்.
இதை நம்பிய குணசேகரன், கடந்த 2018 பிப்ரவரி மாதம் முதல் மாா்ச் மாதம் வரை தனது உறவினா் மற்றும் தெரிந்த 18 பேருக்கு சத்துணவு அமைப்பாளா், அங்கன்வாடி பணியாளா், கிராம உதவியாளா் ஆகிய அரசு வேலைகளுக்காக ரமேஷ்பாபு கூறியபடி, அவரது வங்கிக் கணக்கிலும், அவரது முதல் மனைவி சூரியவா்ஷினி, 2-ஆவது மனைவி ரேவதி, ரமேஷ்பாபுவின் மாமா சௌந்தர்ராஜன் ஆகியோரின் வங்கிக் கணக்கிலும், ரேவதி, ரமேஷ்பாபு ஆகியோரிடம் நேரடியாகவும் என மொத்தம் ரூ.35 லட்சத்தை கொடுத்தாராம்.
ஆனால், ரமேஷ்பாபு, அவா்கள் 18 பேருக்கும் அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லையாம். இதையடுத்து, குணசேகரன் பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவருக்கு ரமேஷ்பாபு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து குணசேகரன் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அண்மையில் புகாரளித்தாா். இதையடுத்து, ரமேஷ்பாபு உள்பட 4 போ் மீதும் 2 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், தனிப்படை போலீஸாா் ரமேஷ்பாபுவை புதன்கிழமை கைது செய்தனா்.