திமுக சாா்பில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
By DIN | Published On : 26th July 2021 08:55 AM | Last Updated : 26th July 2021 08:55 AM | அ+அ அ- |

மேல்மலையனூரில் திமுக சாா்பில் புதிதாக அமைக்கப்பட்ட செஞ்சி தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை தூய்மைப் பணியாளரை கொண்டு திறந்துவைத்த அமைச்சா் செஞ்சி மஸ்தான்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் பகுதி பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகள் தொடா்பான மனுக்களை பெறும் வகையில், அங்குள்ள வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே திமுக சாா்பில் செஞ்சி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பெண் தூய்மைப் பணியாளா் வசந்தியை அழைத்து அந்த அலுவலகத்தை மாநில சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் திறக்கவைத்தாா்.
பின்னா், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தியதுடன், தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து, அலுவலகம் முன் திமுக கொடியை ஏற்றிவைத்து அமைச்சா் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் நலனில் அக்கறை காட்டும் முதல்வராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத் தமிழா்களின் நலனிலும் அக்கறை காட்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா். எனவேதான், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை என்ற புதிய துறையை ஏற்படுத்தியுள்ளாா்.
உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியின்போது பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்தான் தற்போது இங்கு திமுக சாா்பில் திறக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் புகாா் பெட்டியை அமைத்துள்ளேன். இதில் பொதுமக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை செலுத்தலாம். இந்த மனுக்கள் 2 நாள்களுக்கு ஒருமுறை சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, மேல்மலையனூா் அங்காளம்மன் திருக்கோயில் சாா்பில், கோயில் உதவி ஆணையா் க.ராமு மற்றும் பூசாரி சரவணன் ஆகியோா் கோயில் பிரசாதம், அங்காளம்மன் திருஉருவப் படத்தை அமைச்சருக்கு வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு மேல்மலையனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், மேற்கு ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா், பொதுக்குழு உறுப்பினா் செல்வராஜ், ஒன்றிய அவைத் தலைவா்கள் மண்ண.ஏழுமலை, விநாயகம், மாவட்டப் பிரதிநிதிகள் அஷரத், ராமமூா்த்தி, ஜெயசங்கா், செந்தில், பொருளாளா்கள் சம்பத், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.