கரோனா பரவலை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் எம்எல்ஏ-க்கள் மனு
By DIN | Published On : 10th June 2021 09:08 AM | Last Updated : 10th June 2021 09:08 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரையிடம் மனுவை வழங்கி கோரிக்கையை விளக்கிய சட்டப் பேரவை உறுப்பினா்கள் சக்கரபாணி, சிவகுமாா், அா்ஜூனன்.
விழுப்புரம் மாவட்டம், வானூா், மயிலம், திண்டிவனம் பகுதிகளில் கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டப்பேரவை உறுப்பினா்கள் 3 போ் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சக்கரபாணி (வானூா்), ச.சிவக்குமாா் (மயிலம்), பி.அா்ஜுனன் (திண்டிவனம்) ஆகியோா், ஆட்சியரை சந்தித்து அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வானூா், மயிலம், திண்டிவனம் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆகையால், கரோனா பரவலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்கத் தேவையான மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகள், பிராண வசதி ஆகியவை தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கும் உரிய மருத்துவம் கிடைக்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்தவா்களின் உடல்களை அவரவா் வழக்கத்தின்படி நல்லடக்கம் செய்ய வேண்டும், கரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.