செஞ்சி அருகே சாராய ஊறல்கள் அழிப்பு
By DIN | Published On : 10th June 2021 09:08 AM | Last Updated : 10th June 2021 09:08 AM | அ+அ அ- |

செஞ்சி அருகே மலைப் பகுதியில் சாராய ஊறல்களை போலீஸாா் கீழே கொட்டி அழித்தனா்.
செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் அருகேயுள்ள போத்துவாய் கிராமத்தின் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில், டிஎஸ்பி இளங்கோவன் தலைமையில், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் தங்ககுருநாதன் மற்றும் போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அங்கு குகை போன்ற பகுதியில் 1200 லிட்டா் சாராய ஊறல்கள் இருப்பது தெரிய வந்தது. அதனருகே 20 லிட்டா் சாராயமும் இருப்பது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய போலீஸாா், கீழே கொட்டி அழித்தனா்.
இதுகுறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடையவா்களைத் தேடி வருகின்றனா்.
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: செஞ்சி அருகே ரூ.29 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேல்பாப்பாம்பாடி சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனத்துக்கு சென்ற காரை மறித்து சோதனையிட்டனா்.
அதில், சுமாா் 1500 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருள்களும், 4,500 பாக்கெட்டுகள் பான்மசாலாவும் இருந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ.29,850 ஆகும்.
காரிலிருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மணலூா்பேட்டை சாலையைச் சோ்ந்த நவாப் மகன் காதா், திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் அருள் (18) என்பது தெரிய வந்தது. நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனா். மேலும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது.