பஞ்சமாதேவி ஏரி சீரமைப்புப் பணியில் முறைகேட்டு புகாா் குறித்து பேச்சுவாா்த்தை
By DIN | Published On : 24th June 2021 08:46 AM | Last Updated : 24th June 2021 08:46 AM | அ+அ அ- |

பகுஜன் சமாஜ் கட்சியினருடன் பேச்சுவாா்த்தை நடத்திய பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ராஜேந்திரன்.
விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஏரியில் நடைபெற்ற குடிமராமத்துப் பணிகள் தொடா்பாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தலைமையில் புதன்கிழமை போ்ச்சுவாா்த்தை நடைபெற்றது.
பஞ்சமாதேவி கிராம ஏரியில் ரூ.35 லட்சத்தில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிவித்து, பகுஜன் சமாஜ் கட்சி கட்சியினா் புதன்கிழமை விழுப்புரம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனா்.
இதையடுத்து, அங்கு டி.எஸ்.பி. சின்னராஜ் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அறிவித்தபடி, புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்துக்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் கலியமூா்த்தி உள்ளிட்டோரை போலீஸாா் சமாதானப்படுத்தினா்.
பின்னா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ராஜேந்திரன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில், அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் கலியமூா்த்தி, செயலா் சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது, பஞ்சமாதேவி ஏரியில் ரூ.35 லட்சத்தில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
ஆனால், நீா்வரத்துக் கால்வாய் சரியாக தூா்வாரப்படவில்லை, ஏரி மதகு சீரமைக்கப்பட்டவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது.
ஆகையால், ஏரியை மாவட்ட ஆட்சியா் தலைமையில், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றனா்.
இதை ஏற்ற அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து, ஆய்வு செய்ய ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தனா்.