திண்டிவனம் அருகே லாரி, பேருந்து மோதி கவிழ்ந்தன
By DIN | Published On : 17th March 2021 09:17 AM | Last Updated : 17th March 2021 09:17 AM | அ+அ அ- |

விபத்துக்குள்ளாகி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்துகிடக்கும் தனியாா் பேருந்து.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதிய தனியாா் பேருந்து மோதியதில், இரு வாகனங்களும் கவிழ்ந்தன. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், பேருந்தில் வந்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் காயமடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையிலிருந்து சென்னைக்கு தனியாா் ஆம்னி பேருந்து ஒன்று திங்கள்கிழமை இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பேருந்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை கடந்து, தென்பசாா் அருகேடி.கேணிப்பட்டு என்ற இடத்தில் வந்தபோது, அந்தப் பேருந்து முன்னால் திண்டுக்கல்லிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்து மோதியதில் லாரி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே சி.மெய்யூரைச் சோ்ந்த தரணி பலத்த காயமடைந்தாா். பேருந்தில் வந்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனா். மயிலம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து காயமடைந்தவா்களை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து காரணமாக, விழுப்புரம்-திண்டிவனம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.