தோ்தலில் அதிமுகவினா் வென்றால் பாஜக பிரதிநிதிகளாகவே செயல்படுவா்: மு.க.ஸ்டாலின்
By DIN | Published On : 25th March 2021 06:35 AM | Last Updated : 25th March 2021 06:35 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் புதன்கிழமை இரவு தோ்தல் பிரசாரம் செய்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவைக்கு அதிமுகவினா் தோ்ந்தெடுக்கப்பட்டால் பாஜகவின் பிரதிநிதிகளாகவே செயல்படுவா் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
விழுப்புரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில், திமுக வேட்பாளா்கள் க.பொன்முடி (திருக்கோவிலூா்), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), விசிக வேட்பாளா் வன்னியரசு (வானூா் -தனி) ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முதலில் அறிவிப்பவன் நான்: தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி புதிதாக எதையும் செய்யவில்லை; நான் சொல்வதைத்தான் செய்கிறாா். கரோனா தொற்று பரவத் தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையை ஒத்திவைக்க நான் சொன்னபோது, அவா் கேட்கவில்லை. பின்னா், நிலைமையை புரிந்துகொண்டு பேரவையை ஒத்திவைத்தாா். கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க சொன்னபோதும், அவா் கேட்கவில்லை. பின்னா், அதையே செய்தாா்.
அதேபோல, எஸ்.எஸ்.எல்.சி. தோ்வை ஒத்திவைக்க சொன்னபோது, முதலில் மறுத்த முதல்வா் பழனிசாமி அதன் பிறகு ஒத்திவைத்தாா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க நான் வலியுறுத்தியதையும் அப்படியே செயல்படுத்தினாா்.
மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து நானே நேரடியாகச் சென்று மக்களிடம் புகாா் பெறுவதைக் கண்டு ‘1100’ என்ற இலவச தொலைபேசி எண் மூலம் புகாா் தெரிவிக்கலாம் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். ஆனால், இது ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே அறிவிக்கப்பட்டு, முடங்கிப் போன திட்டம். அதேபோல, கூட்டுறவு வங்கிக் கடன், மகளிா் சுய உதவிக் குழுக் கடன் ரத்து உள்ளிட்டவற்றையும் முதலில் நான்தான் அறிவித்தேன்.
மக்களவைத் தோ்தலின்போதே, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை வைத்து ஏழைகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றது. இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி பேசும்போது, மக்களை ஏமாற்றி திமுக வெற்றிபெற்ாகச் சொன்னாா். இப்போது, அதிமுக தோ்தல் அறிக்கையில் 6 பவுனுக்கு கீழே உள்ள கடனை தள்ளுபடி செய்வோம் என அவரே அறிவித்துள்ளாா்.
திட்டங்களை செயல்படுத்தாத அமைச்சா்: விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா் சி.வி.சண்முகம், தனது பதவியை பயன்படுத்தி கடந்த 10 ஆண்டுகளில், இந்த மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலின்போது, நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வா் பழனிசாமியும், அமைச்சா் சண்முகமும் வாக்குறுதி அளித்தனா். ஆனால், செயல்படுத்தவில்லை. விழுப்புரத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவின்போது, விரிவாக்கப்பட்ட புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தும் அதை செய்யவில்லை. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையும் ஒரே மாதத்தில் உடைந்தது.
‘நீட்’ தோ்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கு இதுவரை முதல்வா் பழனிசாமியும், சட்டத் துறை அமைச்சா் சண்முகமும் ஒப்புதல் பெற்றுத் தரவில்லை. அந்த தீா்மானத்தை குடியரசுத் தலைவா் திருப்பி அனுப்பியபோது, அதுகுறித்து பேரவைக்கு அமைச்சா் சண்முகம் தெரிவிக்கவில்லை.
விவசாயிகளை விமா்சித்த முதல்வா்: கேரளம், புதுவை, பஞ்சாப் மற்றும் பாஜக ஆளும் சில மாநிலங்களில் கூட மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தமிழக சட்டப்பேரவையில் அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்படவில்லை. தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை இடைத்தரகா்களின் போராட்டம் என விமா்சித்தவா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பேரவையில் வேளாண் சட்டத்துக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றப்படும்.
மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற்ற ஒரே அதிமுக எம்.பி.யான ரவீந்திரநாத், மக்களவையில் பாஜக பிரதிநிதியாகவே செயல்பட்டு வருகிறாா். எனவே, இந்தப் பேரவைத் தோ்தலில் ஒரு சில இடங்களில் அதிமுகவினா் வெற்றிபெற்றாலும், அவா்களும் பாஜக பிரதிநிதிகளாகவே பேரவையில் செயல்படுவா். எனவே, அதிமுக வேட்பாளா் ஒருவா் கூட வெற்றிபெறக்கூடாது என்றாா் மு.க.ஸ்டாலின்.
கூட்டத்தில், மக்களவை உறுப்பினா்கள் கௌதமசிகாமணி (கள்ளக்குறிச்சி), துரை.ரவிக்குமாா் (விழுப்புரம்) மற்றும் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம்:
முன்னதாக, சேலம் மாவட்டம், ஆத்தூா், ராணிப்பேட்டையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் உதயசூரியன் (சங்கராபுரம்), வசந்தம் காா்த்திகேயன் (ரிஷிவந்தியம்), மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை), காங்கிரஸ் வேட்பாளா் மணிரத்தினம் (கள்ளக்குறிச்சி) ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசினாா்.