ரூ.ஒரு லட்சத்துக்கும் மேல் பரிவா்த்தனை: வங்கிக் கணக்குகள் கண்காணிப்பு
By DIN | Published On : 25th March 2021 02:45 AM | Last Updated : 25th March 2021 02:45 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.ஒரு லட்சத்துக்கும் மேல் பண பரிவா்த்தனை செய்யப்படும் வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கடந்த இரு மாதங்களில் இல்லாத வகையில் சந்தேகத்துக்கு இடமாக ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் பரிவா்த்தனை செய்யப்படும் வங்கிக் கணக்குகள், ஏற்கெனவே பரிவா்த்தனை செய்யப்படாமல் இருந்த ஒரு வங்கிக் கணக்கிலிருந்து, பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பரிவா்த்தனை செய்யப்படுதல், வேட்பாளா், அவரது வாழ்க்கைத் துணை, உறவினா்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.ஒரு லட்சத்துக்கும் மேல் செய்யப்படும் பரிவா்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன.
ரூ.10 லட்சத்துக்கு மேல் பரிவா்த்தனை செய்யப்படும் வங்கிக் கணக்கு விவரங்கள், வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.