விழுப்புரத்தில் மளிகைப் பொருள்கள்வாங்க திரண்ட பொதுமக்கள்
By DIN | Published On : 09th May 2021 01:56 AM | Last Updated : 09th May 2021 01:56 AM | அ+அ அ- |

தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 10) முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதையொட்டி, விழுப்புரத்தில் மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருள்களை வாங்க சனிக்கிழமை ஏராளமானோா் திண்டனா்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திங்கள்கிழமை (மே 10) முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டற்றை வாங்க சனிக்கிழமை ஆா்வம் காட்டினா்.
குறிப்பாக, விழுப்புரம் நகரில் உள்ள மொத்த வியாபாரக் கடைகளில் சிறு வியாபாரிகள் குவிந்தனா். இதனால், எம்.ஜி. சாலை, பாகா்ஷா வீதி, நேருஜி சாலை, திருச்சி, சென்னை நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, எம்.ஜி. சாலையில் ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மளிகை, காய்கறி, பழக்கடைகள் மட்டுமன்றி, ஜவுளிக் கடைகள், பல்வேறு உதிரிபாக கடைகளும் திறக்கப்பட்டிருந்ததால், அவற்றிலும் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.
இதுபோல, கடைகளில் அதிகளவில் சமூக இடைவெளியின்றி திரண்ட பொதுமக்களால் மாவட்டத்தில் கரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.