பொது முடக்க விதிகளை மீறியதாக 13 கடைகளுக்கு அபராதம்
By DIN | Published On : 13th May 2021 08:35 AM | Last Updated : 13th May 2021 08:35 AM | அ+அ அ- |

கரோனா முழு பொது முடக்க விதிகளை மீறியதாக 13 கடைகளுக்கு அபராதம் விதித்து விழுப்புரம் வட்டாட்சியா் வெங்கட்டசுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்தாா்.
விழுப்புரம் வட்டத்துக்குள்பட்ட வளவனூா், காணை, கண்டமங்கலம், கெடாா் உள்ளிட்ட பகுதிகளில் பொது முடக்க விதிகளைப் பின்பற்றி அத்தியாவசியக் கடைகள் இயங்குகின்றனவா என்று வட்டாட்சியா் வெங்கட்டசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, வளவனூா் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரமான நண்பகல் 12 மணியைக் கடந்து செயல்பட்டதாக 2 மளிகைக் கடைகள், அனுமதிக்கப்படாத 4 இனிப்பகங்கள் என மொத்தம் 6 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து வட்டாட்சியா் வெங்கட்டசுப்பிரமணியன் உத்தரவிட்டாா்.
மேலும், கண்டமங்கலத்தில் நண்பகல் 12 மணிக்கு மேல் இயங்கிய மளிகைக் கடை, காணையில் 2 பலசரக்குக் கடைகள், அனுமதிக்கப்படாத 2 கடைகள், கெடாா் பகுதியில் அனுமதிக்கப்படாத 2 கடைகள் என மொத்தம் 7 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரம் வட்டத்தில் புதன்கிழமை மட்டும் 13 கடைகளுக்கு மொத்தமாக ரூ.6,500 அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆய்வின்போது, வருவாய் ஆய்வாளா்கள் சிவசக்தி, தங்கம், நா்மதா, இளவரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.