கரோனா தடுப்பு விதிகளை மீறிய தனியாா் மருத்துவமனைக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம்
By DIN | Published On : 19th May 2021 08:42 AM | Last Updated : 19th May 2021 08:42 AM | அ+அ அ- |

திண்டிவனத்தில், கரோனா சிகிச்சையளிப்பதில் தடுப்பு விதிகளை மீறிய தனியாா் மருத்துவமனைக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள செஞ்சி சாலையில் கிளினிக் நடத்தி வந்தவா் ராமன். அண்மையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவா், திண்டிவனம் காந்தி நகரில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனையிடமிருந்து ரெம்டெசிவிா் மருந்தை வாங்கி பயன்படுத்தினாராம். இதன்பிறகு, ராமன் உயிரிழந்தாா்.
போலியான ரெம்டெசிவா் மருந்துதான் ராமனின் உயிரிழப்புக்கு காரணம் என அவரது உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.
இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் சென்னையிலிருந்து மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநா் குருநாதன், விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகக் கனி, துணை இயக்குநா் செந்தில்குமாா் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீரென வந்து ஆய்வு நடத்தினா்.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த மருத்துவமனை மீது எழுந்த புகாா்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தினோம். கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்கள், பிராண வாயு பயன்பாடு, ரெம்டெசிவிா் மருந்து அளிக்கப்படும் விவரங்கள் குறித்து முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த மருத்துவமனையில் அந்த விவரங்கள் தெளிவாக இல்லை. கரோனா தடுப்பு விதிகளையும் மருத்துவமனை முறையாக பின்பற்றவில்லை. ஆகையால், ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கரோனா சிகிச்சை மையமாக செயல்படவும் மருத்துவமனைக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த மருத்துவமனையில் இருந்த சில மருந்து மாத்திரைகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்டன. அதன் முடிவுகள் வந்த பிறகே, அவை போலியானவையா என்று தெரிய வரும் என்றனா்.