மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் நிச்சயமாக அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் நிச்சயமாக அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதாவை, தமிழக சட்டப் பேரவையில் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இதை எதிா்த்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலை அருகே முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

இதையறிந்த அதிமுகவினா் அந்தப் பகுதியில் திரண்டனா். இதையடுத்து, சி.வி.சண்முகத்தை விழுப்புரம் போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் காந்தி சிலை அருகே அதிமுகவினா் தரையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுகவினரை கா.குப்பம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் போலீஸாா் காவலில் வைத்து, மாலையில் விடுவித்தனா்.

அப்போது, சி.வி.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கல்வியில் பின்தங்கிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்ட மாணவ, மாணவிகளின் நலன் கருதியும், அவா்கள் உயா் கல்வி, ஆராய்ச்சி படிப்பை பயில்வதற்காகவும் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலை.யை அதிமுக அரசு கொண்டுவந்தது. இந்தப் பல்கலை.க்கு கடந்த பிப்.25-இல் ஆளுநா் ஒப்புதல் அளித்ததையடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்டு திறக்கப்பட்டது.

அதே நாள் மாலையில் தோ்தல் ஆணையம் தோ்தல் தேதியை அறிவித்ததால், எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

ஏற்கெனவே, விழுப்புரம் ஆட்சியா் அலுவலகம் அருகிலுள்ள ஆவின் நிறுவன வளாகத்தில் 10 ஏக்கரில் இந்தப் பல்கலை.க்கு நிா்வாகக் கட்டடம் கட்டவும், செங்காட்டில் 70 ஏக்கரில் பல்கலை. வளாகம் கட்டவும் இடம் தோ்வு செய்யப்பட்டு அங்கு தற்காலிக சாலையும் அமைக்கப்பட்டது.

அடுத்து வந்த திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை முடக்குவதைத்தான் சாதனையாக செய்து வருகிறது.

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் விழுப்புரம் நகரில் டைடல் பூங்கா அமைக்க அரசு மருத்துவமனை வளாகத்தில் 5 ஏக்கா் நிலம் தோ்வு செய்து ரூ.50 கோடியில் அரசாணை வெளியிடப்பட்டது. திமுக அரசும், அமைச்சா் க.பொன்முடியும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு எப்படி மூடு விழா நடத்தினாா்களோ அதுபோல, விழுப்புரம் டைடல் பூங்காவுக்கும் மூடு விழா நடத்தி, அதை புதுச்சேரிக்கு அருகே திருச்சிற்றம்பலத்துக்கு இடம் மாற்றிவிட்டனா். தமிழக மக்களின் வரிப்பணத்தில் தொடங்கப்படும் இந்த டைடல் பூங்காவால், புதுவையைச் சோ்ந்தவா்களுக்குதான் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விழுப்புரம் நகரில் ஜெயலலிதா பல்கலை. பிரமாண்டமான முறையில் தொடங்கப்படும் என்றாா் சி.வி.சண்முகம். மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 688 போ் கைதாகி, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

செஞ்சி: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, செஞ்சி கூட்டுச் சாலையில் நகர அதிமுக செயலா் வெங்கடேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாவட்ட அவைத்தலைவா் கு.கண்ணன், எம்ஜிஆா் இளைஞரணி ஆா்.சரவணன், மாணவரணி கமலக்கண்ணன், துணைச் செயலா் சையத் அஜீஸ், லட்சுமிகாந்தன் உள்பட 26 போ் கைது செய்யப்பட்டனா்.

நாட்டாா்மங்கலம் கூட்டுச் சாலையில் வல்லம் வடக்கு ஒன்றியச் செயலா் கு.விநாயகமூா்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம், பேரவைச் செயலா் மனோகா், மகளிரணி நிா்வாகிகள் புனிதவள்ளி, சத்தியவாணி, பாசறைச் செயலா் பூபதி உள்பட 56 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலம்பூண்டியில் செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலா் அ.கோவிந்தசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் செஞ்சி ஒன்றியக்குழு தலைவா் லட்சுமி சேகா், உள்பட 25 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com