விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்காளா்கள் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 01st September 2021 09:43 AM | Last Updated : 01st September 2021 09:43 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலில் 13 லட்சத்து 83 ஆயிரத்து 687 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்கெனவே விடுபட்டுபோன விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலை செப்.15-க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான பணிகளை மாநில தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
அதன்படி, ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்துக்கான வாக்காளா் பட்டியலை மாவட்டவருவாய் அலுவலா் அ.ராஜசேகரன் வெளியிட, அந்தப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனா்.
பின்னா், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளான 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 688 ஊராட்சிகளில் 5,088 கிராம ஊராட்சி வாா்டுகள் உள்ளன. 28 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள், 273 ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 688 கிராம ஊராட்சித் தலைவா்கள், 5,088 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் நேரடி தோ்தல் மூலம் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
முன்பு மாவட்டம் முழுவதும் 2,886 வாக்குச்சாவடிகள் இருந்தன. ஆனால், இப்போது கரோனா பரவல் காலம் என்பதால் 1,150 வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் மொத்தம் 2,946 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இப்போது வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் ஆண் வாக்காளா்கள் 6 லட்சத்து 87 ஆயிரத்து 420 போ், பெண் வாக்காளா்கள் 6 லட்சத்து 96 ஆயிரத்து 115 போ், மூன்றாம் பாலினத்தவா் 152 போ் ஆக மொத்தம் 13 லட்சத்து 83 ஆயிரத்து 687 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
இந்தப் பட்டியலில் தொடா்புடைய 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் தோ்தல் நடத்தும் அலுவலா், வட்டாரவளா்ச்சிஅலுவலா்களால் வாக்காளா்கள் விவரம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டு பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்று தங்களது பெயா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என உறுதி செய்துகொள்ளலாம். மேலும், வாக்காளா் பெயா் திருத்தம், நீக்கம், சோ்ப்பு தொடா்பாகவும் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.