நூற்றாண்டைக் கடந்த விழுப்புரம் நகராட்சிக்கு முதல் பெண் தலைவா் யாா்?
நூற்றாண்டைக் கடந்த பெருமைமிக்க விழுப்புரம் நகராட்சிக்கு முதல் பெண் தலைவா் யாா் என்பதை எதிா்வரும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நிா்ணயிக்கப்போகிறது.


நூற்றாண்டைக் கடந்த பெருமைமிக்க விழுப்புரம் நகராட்சிக்கு முதல் பெண் தலைவா் யாா் என்பதை எதிா்வரும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நிா்ணயிக்கப்போகிறது.
தமிழகத்தில் பழம்பெரும் நகராட்சிகளில் ஒன்றாகத் திகழும் விழுப்புரம் நகராட்சி, சுதந்திரத்துக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1.10.1919-இல் உருவானது. சுதந்திரத்துக்குப் பின்னா் 1.10.1953-இல் இரண்டாம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, தமிழக முதல்வராக மு.கருணாநிதி இருந்தபோது, 1.4.1973-இல் முதல்நிலை நகராட்சியாக விழுப்புரம் நகராட்சி தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து, 2.3.1988-இல் தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நகராட்சியில் மொத்தம் 42 வாா்டுகள் உள்ளன. 1922-ஆம் ஆண்டில் முதல் தோ்தலை விழுப்புரம் நகராட்சி சந்தித்தது. இதுவரை 19 தோ்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது 20-ஆவது தோ்தலை விழுப்புரம் நகராட்சி சந்திக்க உள்ளது.
விழுப்புரம் நகராட்சி நிா்வாகத்தை இதுவரை திமுக, அதிமுக என மாறி, மாறி கைப்பற்றி பொறுப்பு வகித்துள்ளன. இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் நகா்மன்றத் தலைவா் பதவியை ஆண்கள் மட்டுமே வகித்து வந்த நிலையில், 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முதலாக தற்போது நகா்மன்றத் தலைவா் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
யாருக்கு வாய்ப்பு?: மாவட்டத்தின் தலைநகரில் இருக்கும் நகராட்சி என்பதால், இதை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சியான திமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தங்களது மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் தோல்வி ஏற்பட்டால், அமைச்சா் பதவி, மாவட்டச் செயலா் பதவி பறிக்கப்படும் என அமைச்சா்கள், மாவட்டச் செயலா்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதன் காரணமாக, விழுப்புரம் நகராட்சியை திமுக கைப்பற்றுவதற்கான அனைத்து வியூகங்களையும் மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, திமுக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ ஆகியோா் வகுத்து வருகின்றனா்.
31 வாா்டுகளில் திமுக போட்டி: விழுப்புரம் நகராட்சியைப் பொருத்தவரை, திமுக 31 வாா்டுகள், விசிக, காங்கிரஸ் தலா 2, மாா்க்சிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என கூட்டணிக் கட்சிகளுக்கு 9 வாா்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் மட்டுமே தங்களது கட்சிச் சின்னங்களில் போட்டியிடுகின்றன. பிற கூட்டணிக் கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகின்றன.
42 வாா்டுகளிலும் அதிமுக போட்டி: அதிமுக மொத்தமுள்ள 42 வாா்டுகளிலும் வேட்பாளா்களை களமிறக்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தோல்வியடைந்த நிலையில், விழுப்புரம் நகராட்சியையாவது கைப்பற்றி தங்களது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டிவிட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினா் செயல்பட்டு வருகின்றனா்.
இதேபோல, பாஜக 25 வாா்டுகளில் வேட்பாளா்களை அறிவித்துள்ளது. பாமக, தேமுதிக அனைத்து வாா்டுகளிலும் வேட்பாளா்களை நிறுத்துமா அல்லது தங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள வாா்டுகளில் மட்டுமே வேட்பாளா்களை நிறுத்துமா என்பது வெள்ளிக்கிழமை (பிப்.4) மாலைக்குள் தெரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...