கரோனா சிகிச்சை: அரசு மருத்துவமனைகளில் 1,400 படுக்கைகள் தயாா்: விழுப்புரம் ஆட்சியா் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள அரசு மருத்துவமனைகளில் 1,400 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.


விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள அரசு மருத்துவமனைகளில் 1,400 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா தொற்று ஏற்படுபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 7 கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவிகள் விடுதியில் 246 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ளும் வகையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகளில் 1,400 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன. இவற்றில் 50 சதவீத படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடியதாகும்.
மேலும், கரோனா தொற்று பாதித்தவா்களைக் கண்டறிந்து, எவ்வித அறிகுறியும் இல்லாதவா்களை வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது குறித்தும், நோய்த் தொற்று அறிகுறியுடன் கூடிய நபா்களை கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது குறித்தும் சுகாதாரத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்படி, மாவட்டத்தில் 1,400 படுக்கை வசதிகளுடன் கூடிய 7 கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. கரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் வசதிகள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா, ஒமைக்ரான் தொற்று குறித்த தகவல்களை அறிந்திடும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் சுகாதாரத் துறை அலுவலா்களுடன், காவல் துறை, வருவாய்த் துறை, 108 அவரச சேவை அலுவலா்கள், பணியாளா்கள் தொடா் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்தக் கட்டுபாட்டு அறையின் வாயிலாக நோய்த் தொற்று பாதித்தவா்களின் விவரங்கள், அவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிசிச்சை முறைகள், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களின் தொடா்பில் உள்ளவா்களின் விவரங்கள் குறித்து சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வட்டார அளவிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மோகன்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் பொற்கொடி, விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் அரிதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...