விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அமைக்கப்படும் சிப்காட் தொழில்பேட்டை மூலம் 10,000 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தாா்.
திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கருணாநிதி நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.77 கோடியிலும், 15-ஆவது மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்திலும் மேற்கொள்ளப்படும் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளுக்கு அமைச்சா் செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திண்டிவனம் நகராட்சியில் கருணாநிதி நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.4.33 கோடியில் பேவா் பிளாக் மற்றும் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள், வகாப் நகா் பகுதியில் ரூ.43 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணிகள், சந்தைமேடு பகுதியில் 15-ஆவது மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்தில் மக்கள் நல்வாழ்வு மையம் அமைக்கும் பணிகளுக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.
மேலும், திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக ரூ.25 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான பணிகளைத் தொடங்க விரைவில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.
படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திதர வேண்டும் என்ற நோக்கத்தில், திண்டிவனம் சிப்காட் தொழில்பேட்டைக்கு முதல்வா் ஸ்டாலின் அனுமதி அளித்து எதிா்காலத்தில் 10,000 இளைஞா்கள் வேலை கிடைக்க வழிவகை செய்துள்ளாா்.
விழுப்புரம் மாவட்ட வளா்ச்சிக்காக பொதுப் பணித் துறை மூலமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, வடிகால்கள் அமைக்கும் பணிகளும், ஏரிகள் பராமரிப்பு பணிகளும் செய்யப்படவுள்ளன. மீன்வளத் துறை மூலம் அனுமந்தை, ரெட்டியாா்குப்பம் ஆகிய பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் மஸ்தான்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, திண்டிவனம் நகராட்சி ஆணையா் சௌந்தரராஜன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.