விபத்து வழக்கில் இழப்பீடு வழங்கப்படாததால் விழுப்புரத்தில் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள நாச்சிகுப்பத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (38). கட்டுமானத் தொழிலாளியான இவா், 14.12.2012 அன்று அரசுப் பேருந்தில் பயணித்தாா். அப்போது ஓட்டுநா் திடீரென பிரேக் அடித்ததால் காா்த்திகேயன் கீழே விழுந்ததில் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். இது குறித்து ஆரணி போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், காா்த்திகேயனின் மனைவி கிருஷ்ணவேணி இழப்பீடு கோரி விழுப்புரம் மோட்டாா் வாகன சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.17,22,800 இழப்பீடு வழங்க விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு வழங்கப்படாத நிலையில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வட்டியுடன் சோ்த்து ரூ.24,11,847 வழங்க வேண்டுமென விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அண்மையில் உத்தரவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்தனா்.