செஞ்சி பேரூராட்சியில் 100 சதவீதம்வரி வசூல் செய்ய முடிவு
By DIN | Published On : 03rd April 2022 05:52 AM | Last Updated : 03rd April 2022 05:52 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டுமென சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலா்கள், பணியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் மொக்தியாா்மஸ்தான் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் செஞ்சி பேரூராட்சிப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுவரும் நெகிழிப் பைகளை தடை செய்வதுடன், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக முதல்வா் அறிவித்துள்ளபடி, மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பேரூராட்சி சாா்பில் நடைபெறும் புதிய திட்டப் பணிகளை அலுவலா்கள் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். குடிநீா்த் தொட்டிகளை பணியாளா்கள் அடிக்கடி கண்காணித்து பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு, சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டும். செஞ்சி பேரூராட்சியில் செலுத்தப்படும் சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்டவைகளை 100 சதவீதம் வசூல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளா் பாா்கவி, துப்புரவு பணி மேற்பாா்வையாளா் ரமேஷ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.