தண்டோரா முறை ஒழிப்பு:விழுப்புரம் எம்.பி. வரவேற்பு
By DIN | Published On : 05th August 2022 02:44 AM | Last Updated : 05th August 2022 02:44 AM | அ+அ அ- |

தமிழகத்தில் தண்டோரா முறை ஒழிக்கப்பட்டதற்கு விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வரவேற்புத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தண்டோரா போடும் முறை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இன்னமும் கீழான நிலையிலேயே வைத்திருப்பதை இந்த உலகுக்கு சொல்லும் முறையாக உள்ளது. இந்த வழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென முதல்வராக கருணாநிதி இந்த காலம் முதல் கடந்த 15 ஆண்டுகளாக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இந்த நிலையில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடா்பாக தண்டோரா போட்டு அறிவிப்பு செய்யப்பட்ட செய்தி கடந்த 1-ஆம் தேதி காட்சி ஊடகங்களில் வெளியானது. அப்போது நான் உடனே தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் பதிவு செய்தேன்.
அதை பல நண்பா்களும் வழிமொழிந்து பதிவுகளை வெளியிட்டனா். அதன் காரணமாகவே, இப்போது தண்டோரா வழக்கத்துக்குத் தடை விதித்து தலைமைச் செயலா் வெ.இறையன்புவின் உத்தரவு வெளியாகி இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாகத் தொடா்ந்த இழிவைப் போக்கிய தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு நன்றி. தமிழக அரசின் தலைமைச் செயலா், இந்த உத்தரவைக் கடிதமாக எழுதியதோடு நிற்காமல், சட்டப் பாதுகாப்பு கொண்ட அரசாணையாக பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ரவிக்குமாா் எம்.பி.