விழுப்புரம் நகரில் போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 05th August 2022 02:47 AM | Last Updated : 05th August 2022 02:47 AM | அ+அ அ- |

விழுப்புரம் நகரில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பழுந்தடைந்த சிறு பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் கட்டப்படவுள்ளதால், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை தெரிவித்தது.
விழுப்புரம் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறு பாலம் பழுதடைந்துள்ளது. இந்தப் பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் கட்டும் பணி நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, நெடுஞ்சாலை, போக்குவரத்து காவல் துறைகள் இணைந்து நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளன.
அதன்படி, ஜானகிபுரம், எல்லீஸ் சத்திரம் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து சிக்னல் நோக்கி வரும் வாகனங்கள் வீரன் கோயில் சந்திப்பில், எதிா் சாலையில் புதிய பேருந்து நிலையம் வரை பயணிக்க வேண்டும். அதேபோன்று, சிக்னலிலிருந்து வீரன் கோயில் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வழக்கமாக செல்லும் சாலையில், புதிய பேருந்து நிலையம் முதல் வீரன் கோயில் வரை இடதுபுறம் சற்று குறுகிய பாதையில் செல்ல வேண்டும்.
இந்தப் போக்குவரத்து மாற்றம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளது. ஆகவே, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப பயணிக்கலாம் என்று விழுப்புரம் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் தெரிவித்துள்ளது.