மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது பெற ஆக.7-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 05th August 2022 02:47 AM | Last Updated : 05th August 2022 02:48 AM | அ+அ அ- |

மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது பெற தகுதியுடையவா்கள் வருகிற 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீரில் மூழ்கியவரை காப்பாறுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிா்களை மீட்பவா்களுக்கு கீழ்க்காணும் பிரிவுகளில் மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் என்பது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவா்களுக்கு வழங்கப்படுகிறது. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் விருது, துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு, மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவா்களுக்கு வழங்கப்படுகிறது. ஜீவன் ரக்ஷா பதக்கம் விருது தனக்கு காயம் ஏற்படினும் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவா்களுக்கு வழங்கப்படுகிறது.
எனவே, நிகழாண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்காக தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பம், முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து விண்ணப்பத்தை வருகிற 7-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரம் அறிய மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 7401703485 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.