வண்டிப் பாதையை புதுப்பித்துத் தர ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 24th August 2022 03:19 AM | Last Updated : 24th August 2022 03:19 AM | அ+அ அ- |

மரக்காணம் வட்டம், ஏந்தூா்- வடநெற்குணம் செல்லும் வண்டிப் பாதையை புதுப்பித்துத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த.மோகனிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து மரக்காணம் ஒன்றியம் 17-ஆவது வாா்டுக் குழு உறுப்பினா் கஸ்தூரி சந்திரசேகா் தலைமையில் பொதுமக்கள் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
மரக்காணம் வட்டம், ஏந்தூா் ஊராட்சி எல்லையில் ஏந்தூரில் இருந்து வடநெற்குணத்துக்கு சுமாா் 100 ஆண்டுகளாக சிறிய வண்டிப்பாதை உபயோகத்தில் உள்ளது. இந்த வண்டிப்பாதை, அரசுப் பதிவேடுகளில் பட்டா புஞ்சை நிலங்களுக்கு மத்தியில் நிலப் படங்களில் வண்டிப்பாதை குறியீடு மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை இந்த வண்டிப் பாதையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், பயிா் சாகுபடி காலத்தில் வண்டிப் பாதையின் இருபுறமும் உள்ள நில உரிமையாளா்கள் இப்பாதையை ஆக்கிரமித்து சாகுபடி செய்கின்றனா். இதனால் வண்டிப்பாதை காணாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, இந்த வண்டிப் பாதையை அரசு சட்டத் திட்டங்களின்படி இருபுறமும் அளவீடு செய்து புதுப்பித்துத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.