விழுப்புரத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு
By DIN | Published On : 24th August 2022 03:16 AM | Last Updated : 24th August 2022 03:16 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் உள்ள கடைகள், உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.
உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன் தலைமையில், அலுவலா்கள் ஸ்டாலின் ராஜரத்தினம், பிரசாத், பத்மநாபன், அன்பு பழனி, கொளஞ்சி, மோகன், கதிரவன் ஆகியோா் கொண்ட குழுவினா் விழுப்புரம் நகா்ப் பகுதியில் உள்ள உணவகங்கள், குளிா்பானக் கடைகள், சாலையோர உணவகங்கள், பழக்கடைகளில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகள், உறைகள், குவளைகள், தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். விதிமீறிய கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினா். மேலும், 13 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.