சிறப்பு ஊக்கத்தொகை பெறவிளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th December 2022 01:43 AM | Last Updated : 09th December 2022 01:43 AM | அ+அ அ- |

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையைப் பெற விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தலைசிறந்த வீரா்களுக்கான சிறப்பு உதவித் தொகையாக ரூ.25 லட்சம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம், வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் என மூன்று வகைகளில் விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பு உதவித் தொகையை வழங்கி வருகிறது. தேசிய, சா்வதேச, ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் சோ்ந்து பயன்பெற விரும்பும் வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 15-ஆம் தேதி மாலை 5 மணி வரை சமா்ப்பிக்கலாம். ஏற்கெனவே அஞ்சல் வழியாக நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையவழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர, பிற விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 9514000777 என்ற கைப்பேசி எண்ணில் ஆடுகளம் தகவல் மையத்தை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் 5 மணி வரை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.