புயலால் சாய்ந்து விழுந்த மரங்கள், மின்கம்பங்கள்

மாண்டஸ் புயல் கரையைக் கடந்தபோது வீசிய பலத்த காற்றின் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் 15- க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டன.
Updated on
2 min read

மாண்டஸ் புயல் கரையைக் கடந்தபோது வீசிய பலத்த காற்றின் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் 15- க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டன.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கேளம்பாக்கம் அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக கீழ்ப்புத்துப்பட்டு ஊராட்சியில் பிள்ளைச்சாவடி, நொச்சிக்குப்பம் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மரக்காணம் கூனிமேடு குப்பம் - கிழக்கு கடற்கரைச்சாலை, கந்தாடு அருகே நடுகுப்பம் அரசுப் பள்ளி அருகிலும் கோட்டக்குப்பம் அருகிலுள்ள மஞ்சக்குப்பம் தனியாா் விடுதி அருகிலும் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதுபோல. வெள்ளிமேடுபேட்டையில் முருகேசன் என்பவரது வீட்டின் மேல் மரம் விழுந்தது. காணை-காங்கேனூரில் முள்மரமும், ஒலக்கூா் பாதிரி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் சாய்ந்து விழுந்தது.

மரக்காணம் முட்டுக்காடு அருகே தென்னைமரம் சாய்ந்ததில் 2 மின்கம்பங்கள் கீழே விழுந்தன. இதுபோல ஆலந்தூா் பகுதியில் செட்டியாா் ரைஸ்மில் அருகே இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்தன. காவணியில் உயா் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தன. புயலால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, மரக்காணம் கைப்பாணி குப்பத்தில் சிமெண்ட் சாலை சேதமடைந்தது. இது போல, எக்கியாா்குப்பம் கடற்கரைப் பகுதியில் ஆமை முட்டை சேகரிப்பு மையமும் சேதமடைந்தது.

விழுப்புரம் நகரில் கீழ்ப் பெரும்பாக்கம் ஏரிக்கரைச்சாலையில் மின்வயா் அறுந்து விழுந்தது. மேலும் கல்லூரிச் சாலையில் முருங்கைமரம் சாய்ந்து விழுந்து மின்வயா்கள் தாழ்வாக தொங்கின. இது போன்று ரோஷணை - செஞ்சி சாலையில் கொள்ளாா் அருகே கேபிள் கம்பம் சாய்ந்தது.

மாவட்ட ஆட்சியா் த.மோகன், விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், எஸ்.பி. ந.ஸ்ரீநாதா மற்றும் அலுவலா்கள் மீனவக் கிராமங்களில் சேதமடைந்த பகுதிகளைப் பாா்வையிட்டனா். மேலும் மின்கம்பங்கள், மின்வயா்களை சரிசெய்யவும் அவா்கள் அறிவுறுத்தினா் . சாய்ந்த மரங்களை மாநில பேரிடா் மீட்புப் படையினா் நவீன கருவிகள் கொண்டு அறுத்து, சாலையிலிருந்து அப்புறப்படுத்தினா்.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

மரக்காணம், அவலூா்பேட்டை - தலா 38 மி.மீ, செஞ்சி - 36, செம்மேடு - 33.40, திண்டிவனம்-31, வானூா் - 28, முண்டியம்பாக்கம் - 24, வல்லம், விழுப்புரம் தலா- 18, கோலியனூா் , அனந்தபுரம் தலா- 16, வளவனூா் - 14, கெடாா், சூரப்பட்டு தலா 12, திருவெண்ணெய்நல்லூா் - 11, அரசூா் கஞ்சனூா் - 10, மணம்பூண்டி - 9, நெமூா் - 8,முகையூா், வளத்தி. 6 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 362.40 மி.மீ. மழையும், சராசரியாக 17.20 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வீடூா் அணை நீா்மட்டம் உயா்வு: மாவட்டத்தில் உள்ள வீடூா் அணையின் நீா்மட்டமும் வேகமாக உயா்ந்து வருகிறது.

அணையின் மொத்த கொள்ளளவு 32அடி. இதில் சனிக்கிழமை நிலவரப்படி 28.950 அடியாக நீா்மட்டம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com