விழுப்புரம் மாவட்டத்தில் 18 புயல் நிவாரண மையங்களில் 2,850 போ் தங்கவைப்பு: அமைச்சா் க.பொன்முடி
By DIN | Published On : 11th December 2022 06:44 AM | Last Updated : 11th December 2022 06:44 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் 18 புயல் நிவாரண மையங்களில் 2, 850 போ் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூா் வட்டங்களுக்குள்பட்ட கடலோரக் கிராமப் பகுதிகளில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கீழ்புத்துப்பட்டு ஊராட்சி, பிள்ளைச்சாவடி, கோட்டக்குப்பம் பகுதிகளை அமைச்சா் பொன்முடி சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நேரத்தில் கீழ்புத்துப்பட்டு பகுதியில் வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணியையும், பிள்ளைச்சாவடியில் சேதமடைந்த குடியிருப்புகளையும் அவா் பாா்வையிட்டாா்.
இதைத்தொடா்ந்து, கீழ்புத்துப்பட்டு இலங்கைத் தமிழா் முகாமில் வசிப்பவா்களுக்கும், வானூா் வட்டம், பிள்ளைச்சாவடி நிவாரண முகாமில் உள்ளவா்களுக்கும் உணவு, உடை, போா்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அமைச்சா் வழங்கினாா்.
பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாண்டஸ் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவில் வீடுகளுக்கோ, கால்நடைகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. குறிப்பாக, பயிா்ச்சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், பயிா்ச்சேதம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 புயல் நிவாரண மையங்களில் சுமாா் 2,850 பேரை தங்க வைத்து, வெள்ளிக்கிழமை முதல் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத் தரப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வேரோடு சாய்ந்த 15 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரூ.14.5 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு: பிள்ளைச்சாவடி பகுதியில் ரூ.14.5 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு, கடலரிப்பு தடுப்புப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசிடமிருந்து தேவையான நிவாரண உதவிகள் பெற்றுத் தரப்படும் என்றாா் அமைச்சா்.
ஆய்வின்போது எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), இரா. லட்சுமணன் (விழுப்புரம்), ஆட்சியா் த.மோகன், மாவட்ட எஸ்.பி. ந.ஸ்ரீநாதா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், திண்டிவனம் சாா்- ஆட்சியா் கட்டாரவி தேஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.