கலைத் திருவிழா நாளை ஒத்திவைப்பு
By DIN | Published On : 11th December 2022 06:49 AM | Last Updated : 11th December 2022 06:49 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு நடத்தப்படவிருந்த கலைத் திருவிழா திங்கள்கிழமைக்கு (டிச.12) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டப் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 4 பள்ளிகளில் புதன்கிழமை தொடங்கி, நடத்தப்பட்டு வந்தன.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடனப் போட்டிகளும், காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இசை(வாய்ப்பாட்டு), கருவியிசை, மொழித்திறன், தோல்கருவி, துளைக்காற்றுக் கருவி, தந்திக் கருவிகள், இசைச் சங்கமம் ஆகிய போட்டிகளும், சரசுவதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கவின்கலை, நுண்கலைப் போட்டிகளும், மருத்துவமனை வீதியிலுள்ள நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் நாடகப் போட்டிகளும் நடத்தப்பட்டு வந்தன.
டிசம்பா் 7, 8 தேதிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு டிசம்பா் 9-ஆம் தேதி போட்டிகள் நடக்கவிருந்தன.
மாண்டஸ் புயல் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இரு நாள்கள் (டிச.9, 10) விடுமுறை அறிவிக்கப்பட்டதால், போட்டிகள் திங்கள்கிழமைக்கு (டிச.12) ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
.