செஞ்சி அருகே கிராம மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 11th December 2022 06:49 AM | Last Updated : 11th December 2022 06:49 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணி வழங்கக்கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செஞ்சி ஊராட்சி ஒன்றியம், காரை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணிகள் முறையாக வழங்கப்படுவதில்லை. வேலையும் சரிவர நடைபெறவில்லையாம்.
இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிா்வாகம் கண்டுகொள்வதில்லை. எனவே வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் செஞ்சி-அனந்தபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த அனந்தபுரம் போலீஸாா் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் நேரில் வந்து கிராம மக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா்.
இந்தப் பிரச்னை குறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பேசி வேலை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.
இந்த போராட்டம் காரணமாக செஞ்சி- அனந்தபுரம் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.