மல்லா் கம்பம் பகுதி நேர பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 22nd December 2022 02:44 AM | Last Updated : 22nd December 2022 02:44 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் மல்லா் கம்பம் பகுதி நேர பயிற்சியாளா் பணிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா திட்ட நிதியுதவியில், தொடக்கநிலை மல்லா் கம்பப் பயிற்சிக்கான ‘விளையாடு இந்தியா மாவட்ட மையம்’ விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இங்கு, மல்லா் கம்பப் பயிற்சியாளராக பயிற்சி வழங்க தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குள்பட்ட மல்லா் கம்ப வீரா், வீராங்கனை தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.
விண்ணப்பதாரா் குறைந்தது 5 ஆண்டுகளாவது விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். சா்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சா்வதேச போட்டிகள் மற்றும் மூத்தோா் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திரப் பயிற்சிக் கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.
தகுதியானோா் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் ஜனவரி 3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.