சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 22nd December 2022 02:45 AM | Last Updated : 22nd December 2022 02:45 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தை அடுத்துள்ள விநாயகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் முருகன் (32), தொழிலாளி. இவா், கடந்த 2020 ஜூலை 12-ஆம் தேதி அதே கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி சாந்தி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலாளி முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் கூறியுள்ளாா். இதையடுத்து, முருகன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.