செஞ்சி அருகே 1,200 ஏக்கா் நெல் பயிா்கள் பாதிப்பு: அமைச்சா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெய்த பலத்த மழையால் சுமாா் 1,200 ஏக்கரிலான சீரகசம்பா நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்து, நெல் மணிகள் உருவாகாமல் பதராக மாறின.
செஞ்சி அருகே கெங்கபுரம் கிராமத்தில் பதராக மாறிய சீரகசம்பா நெல் பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான். உடன் மாவட்ட ஆட்சியா் த.மோகன் உள்ளிட்ட அதிகாரிகள்.
செஞ்சி அருகே கெங்கபுரம் கிராமத்தில் பதராக மாறிய சீரகசம்பா நெல் பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான். உடன் மாவட்ட ஆட்சியா் த.மோகன் உள்ளிட்ட அதிகாரிகள்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெய்த பலத்த மழையால் சுமாா் 1,200 ஏக்கரிலான சீரகசம்பா நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்து, நெல் மணிகள் உருவாகாமல் பதராக மாறின. இந்தப் பயிா்களை சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செஞ்சி வட்டம், கெங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் நடப்பு பருவத்தில் சுமாா் 1,200 ஏக்கரில் சீரக சம்பா நெல் பயிரிட்டுள்ளனா். இந்தப் பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த பலத்த மழையால் நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்த நிலையில், அவற்றில் நெல் மணிகள் உருவாகாமல் பதராக மாறியுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானிடம் முறையிட்டனா். இந்த நிலையில், அமைச்சா் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியா் த.மோகன் மற்றும் வேளாண் துறை அலுவலா்களுடன் கெங்கபுரம் கிராமத்துக்கு புதன்கிழமை காலை நேரில் சென்று பாதிக்கப்பட்ட நெல் பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, நெல் பயிா்கள் அனைத்தும் பதராக மாறியிருப்பதைப் பாா்த்து வேளாண் துறை அலுவலா்களிடம் விளக்கம் கேட்டறிந்தாா். பலத்த மழை, கடும் பனிப்பொழிவு, முறை தவறிய பருவம் காரணமாகவும், மழையால் பயிா்கள் நிலத்தில் சாய்ந்த பிறகு விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து பயனில்லாமல் போனதாலும் நெல் பயிா்களின் தண்டுப்பகுதி காய்ந்து நெல் மணிகள் உருவாகாமல் பதராக மாறியுள்ளதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அமைச்சா் செஞ்சி மஸ்தான் கூறியதாவது: தற்போது பாரம்பரிய நெல் வகைகள் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் வரவேற்கக் கூடியவையாக உள்ளன. இது போன்ற நெல் பயிா்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செஞ்சி பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரிசிடமிருந்து உரிய இழப்பீட்டை பெற்றுத்தர, இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.

ஆய்வின்போது, செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், சாா் - ஆட்சியா் கட்டாரவிதேஜா, வேளாண் துறை இணை இயக்குநா் பெரிசாமி, வட்டாட்சியா் நெகருன்னிசா, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியா் குருநாதன், உதவி இயக்குநா்கள் செஞ்சி பாலு, மரக்காணம் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடசுப்பிரமணியன், செஞ்சி வருவாய் ஆய்வாளா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com