மண்பாண்டத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd December 2022 02:45 AM | Last Updated : 22nd December 2022 02:45 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் (குலாலா்) சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் புதிய மண்பானை, மண் அடுப்பு வழங்க வேண்டும். மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இலவச மின்விசை சக்கரம் வழங்க வேண்டும். களிமண் எடுப்பதற்கான ஆணையும், தொழில்கடனும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.ராஜி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.வினோத் முன்னிலை வகித்தாா்.
சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவா் எஸ்.என்.பழனி, மாநில துணைத் தலைவா் ஜி.மாரிமுத்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூட தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா் சி.மாரிமுத்து உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். மாவட்டப் பொருளாளா் அய்யனாா் வரவேற்றாா்.
மாவட்ட இளைஞரணித் தலைவா் ஏழுமலை, மாநில துணைத் தலைவா் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முன்னதாக, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் பானை உள்ளிட்ட மண்பாண்டப் பொருள்களை செய்தவாறே முழக்கமிட்டனா்.