கிசான் திட்டம்: மாா்ச் 5-க்குள் ஆதாா் எண்ணை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் அறிவுரை
By DIN | Published On : 27th February 2022 05:00 AM | Last Updated : 27th February 2022 05:00 AM | அ+அ அ- |

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் ஊக்க தவணைத் தொகை பெற விரும்பும் விவசாயிகள் மாா்ச் 5-ஆம் தேதிக்குள் தங்களது ஆதாா் எண்ணை உரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ், நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வேளாண் இடுபொருள்கள் வாங்கும் வகையில் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ், 2 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இதுவரை விவசாயிகளுக்கு 10 தவணை தொகைகள் வரப்பெற்றுள்ளன. தற்போது விவசாயிகள் 11-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு தங்களது ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியமாகும்.
தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், தங்கள் விவரங்களை பி.எம். கிசான் திட்ட வலைதளத்தில் சரிபாா்ப்பு செய்யலாம்.
ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ - சேவை மையங்களின் மூலம் பி.எம். கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து விவரங்களை சரிபாா்ப்பு செய்யலாம். அதற்கான கட்டணமாக ரூ.15-ஐ இ - சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும்.
மேற்கூறிய இரண்டு முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகள் தங்கள் ஆதாா் விவரங்களை மாா்ச் 5-ஆம் தேதிக்குள் பி.எம். கிசான் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கான 11-ஆவது தவணைத் தொகை விடுவிக்கப்படும் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.