முன்னாள் அமைச்சா்களை முடக்க நினைக்கும் தமிழக முதல்வரின் கனவு பலிக்காது-சி.வி.சண்முகம்
By DIN | Published On : 27th February 2022 04:58 AM | Last Updated : 27th February 2022 04:58 AM | அ+அ அ- |

பொய் வழக்குகளைப் பதிவு செய்து முன்னாள் அமைச்சா்களை முடக்க நினைக்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்டச் செயலருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பனையபுரம், கோலியனூா் ஒன்றியம் கண்டியமடை, கோலியனூா், அப்பிசாம்பாளையம் ஆகிய இடங்களில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி சி.வி.சண்முகம் பேசியதாவது:
அதிமுகவை பொருத்தவரை ஆட்சியில் இருந்தாலும், எதிா்க்கட்சி வரிசையில் இருந்தாலும் மக்களுக்காகவே குரல் கொடுக்கும். ஆனால், திமுகவை பொருத்தவரை ஆட்சிக்கு வந்துவிட்டால், அதிகார துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிடுவாா்கள்.
இப்போது முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனா். கள்ள வாக்கு போட்ட திமுக தொண்டரை போலீஸாரிடம் ஒப்படைத்தது எப்படி குற்றமாகும்?
தொடா்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்து முன்னாள் அமைச்சா்களை முடக்க, தமிழக முதல்வா் ஸ்டாலின் எண்ணுகிறாா். அவரது கனவு பகல் கனவு; ஒருபோதும் பலிக்காது. திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை மக்களிடம் எடுத்துச் செல்வோம் என்றாா் அவா்.
நிகழ்ச்சிகளில் கோலியனூா் ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், விழுப்புரம் நகரச் செயலா்கள் ஜி.கே.ராமதாஸ், இரா.பசுபதி, கண்டமங்கலம் ஒன்றியச் செயலா் ராமதாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.