வீடூா் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 14th January 2022 04:58 AM | Last Updated : 14th January 2022 04:58 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூா் அணையிலிருந்து பாசனத்துக்காக வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
கடந்த நவம்பா் மாதம் பெய்த தொடா் மழையால் வீடூா் அணை நிறைந்தது. இதையடுத்து, பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அணையிலிருந்து பாசன வாய்க்கால்களில் வியாழக்கிழமை தண்ணீரைத் திறந்துவிட்டாா்.
இதன்மூலம், விழுப்புரம் மாவட்டம் உள்பட தமிழகப் பகுதிகளில் 2,200 ஏக்கா் விளைநிலங்கள், புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கா் விளைநிலங்கள் என மொத்தம் 3,200 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தற்போது அணையிலிருந்து ஒருபோக பாசனத்துக்காக (போதிய அளவு தண்ணீா் இருக்கும் வரை) 135 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.
அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் தமிழகப் பகுதியான வீடூா், சிறுவை, பொம்பூா், பொன்னம்பூண்டி, கோரக்கேணி, ஐவேலி உள்ளிட்ட 11 கிராமங்களும், புதுவை மாநிலத்தில் 5 கிராமங்களும் பயன்பெறும் என்று அமைச்சா் கூறினாா்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), இரா.இலட்சுமணன் (விழுப்புரம்), ச.சிவக்குமாா் (மயிலம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெகதீஸ்வரி பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...