செஞ்சியில் குழந்தைகளோடு துள்ளி விளையாடும் புள்ளிமான்!
By DIN | Published On : 31st July 2022 06:50 AM | Last Updated : 31st July 2022 06:50 AM | அ+அ அ- |

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு காப்புக்காட்டிலிருந்து சனிக்கிழமை வந்த புள்ளிமானுக்கு தழையைக் கொடுக்கும் சிறுவன்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு அருகிலுள்ள காப்புக் காட்டிலிருந்து தினந்தோறும் வரும் புள்ளி மான் குழந்தைகளோடு துள்ளி விளையாடி வருகிறது.
செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செஞ்சிக்கோட்டை மலை அடிவாரத்தில் உள்ளது. மேலும், செஞ்சிக்கோட்டையைச் சுற்றிலும் காப்புக்காடும் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் புள்ளிமான் ஒன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வழி தவறி வந்தது. இந்த மானைப் பாா்த்த மக்கள் மகிழ்ச்சியடைந்து, அதற்கு உணவுப் பொருள்களை கொடுத்தனா்.
இதையடுத்து, தினந்தோறும் மாலை வேளை ஆனதும் காட்டுப் பகுதிக்குச் செல்லும் இந்த மான், விடிந்த பிறகு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகப் பகுதிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால், இந்தப் பகுதி மக்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து மானை பாா்வையிட்டுச் செல்கின்றனா். அப்போது, குழந்தைகள் கொடுக்கும் இலைதழைகளை மான் உட்கொள்வதுடன், குழந்தைகளுடன் துள்ளி விளையாண்டு வருகிறது.