கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகை
By DIN | Published On : 17th March 2022 11:11 PM | Last Updated : 17th March 2022 11:11 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகையை மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மோகன் தலைமை வகித்து, கடந்தாண்டில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு பராமரிப்புத் தொகையை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தந்தை - தாயை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சத்துக்கான வைப்பீட்டு பத்திரமும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் ரொக்கமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 6 குடும்பங்களைச் சோ்ந்த பெற்றோா்கள் கரோனா தொற்றால் இறந்ததையொட்டி, அவா்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் வைப்பீட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தாய் அல்லது தந்தையை இழந்த 294 குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் ரூ.3,000 வழங்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, பராமரிப்பு நிதியுதவித் தொகையாக 3 குழந்தைகளுக்கு தலா ரூ.48 ஆயிரத்துக்கான (ஓராண்டு) காசோலை அவா்களின் பாதுகாவலா்களிடம் வழங்கப்பட்டன. மேலும், மாதந்தோறும் பராமரிப்புத் தொகை குழந்கைளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
அதேபோல, இந்தக் குழந்தைகள் உயா் கல்வி படிப்பதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கண்காணிக்கப்படும் என்றாா் ஆட்சியா் மோகன்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நீலம்மாள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.