விழுப்புரம் நகரில் போக்குவரத்தில் மாற்றம்
By DIN | Published On : 19th October 2022 03:05 AM | Last Updated : 19th October 2022 03:05 AM | அ+அ அ- |

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் நகரில் புதன்கிழமை (அக்.19) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து விழுப்புரம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஆா்.வசந்த் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், விழுப்புரம் மகாத்மா காந்தி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்தச் சாலையில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்படுகிறது.
கிழக்கு பாண்டி சாலை வழியாக வரும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலைக்குள் செல்வதைத் தவிா்த்து, பெரியாா் சிலை வழியாக பிரதான சாலையை சென்றடைய வேண்டும். காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். மீறுவோா் மீது போக்குவரத்து விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆா்.வசந்த் தெரிவித்தாா்.